அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
2017-ம் ஆண்டில் சிங்கம் 3, பைரவா போன்ற படங்கள் பண்டிகை நாட்களில் வெளியான போது, திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இதுதொடர்பாக அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த அனிதா சுமந்த் இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்..
இந்நிலையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததாகவும், சம்மந்தப்பட்ட திரையரங்குகளிடம் தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திரையரங்குகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.. அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்..