உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட பட்டியலின தலைவர்கள் முதல் பிரதிநிதிகள் வரை மீதான சாதிய பாகுபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழகத்தில் ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் எவ்வித சாதிய பாகுபாடும் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், பல மாவட்டங்களில் சாதிய பாகுபாடு காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைவர் பெயர் பலகை இல்லாத ஊராட்சிகளில், பெயர் பலகை வைப்பதை உறுதி செய்து அதன் விவரத்தை புகைப்படங்களுடன் அரசுக்கு அனுப்பவும் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவரை, தலைவர் நாற்காலியில் அமர வைப்பதையும், தலைவர்கள் மற்றும் பிரநிதிகள் அவர்கள் அலுவலகத்தில் அமர்ந்து அலுவலகப் பணிகளை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.