தற்போது கோடை காலம் என்பதால் நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பஞ்சாப் மாநிலத்தில் மின்சார தேவைகளை குறைக்கும் வகையில், மாநில அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகின்றன. இந்நிலையில், மாநிலத்தில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றியமைப்பதற்கு பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மே 2ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று முதலமைச்சர் பகவந்த் சிங் மன் அறிவித்துள்ளார். இந்த முடிவின் மூலம் 300 முதல் 350 மெகாவாட் வரையிலான மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் பொதுமக்களும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்னரே அரசு அலுவலகங்களில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.