வாக்காளர் அடையாள அட்டை எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா உட்பட ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்விகளை எழுப்பியது.
பல்வேறு மாநிலங்களிலும் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும், வாக்காளர்கள் பெயர்கள் சேர்ப்பு, நீக்கத்திலும் குளறுபடி இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியானது தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர், சட்டமன்றத் துறை செயலாளர், தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசியலமைப்பின் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 23(4), 23(5) மற்றும் 23(6) ஆகியவற்றின் விதிகளின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இடையே தொழில்நுட்ப ஆலோசனைகள் விரைவில் தொடங்க உள்ளன.