பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அஜித்குமார் குடியரசு தலைவரிடமிருந்து விருதை பெற்றார். இந்த விருது இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதாகும்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி போன்றோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தமிழ்நாட்டை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் குடியரசு மாளிகையில் பத்மபூஷன் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த பெருமைமிகு விருது பெற்றுக் கொள்வதற்காக அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா மகன் ஆத்விக் உடன் விமானம் மூலம் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அஜித்குமார் குடியரசு தலைவரிடமிருந்து விருதை பெற்றார். ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அஜித்துக்கு பத்மபூஷன் விருதை வழங்கி கெளரவித்தார். தனது நன்றியைப் பகிர்ந்து கொண்ட அஜித், இந்த மதிப்புமிக்க கௌரவத்திற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.