அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாகவும் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தனியார் ஊடகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் ஷாருக்கானுக்கு படப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அடிபட்டு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதாகவும், உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கானுக்கு மூக்கில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூக்கில் பேண்டேஜ் உடன் அவர் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் விபத்துக்குப் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ளதாகவும், இது குறித்து மேலும் கவலைப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து வசூலை வாரிக்குவித்தது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 1050 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது.
தற்போது ஷாருக்கான் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முதன்முறையாக ஷாருக்கானுடன் ஜோடி சேர்கிறார். விஜய் சேதுபதி ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா, அனிருத், அட்லீ மூவருமே முதன்முறையாக பாலிவுட்டில் நேரடியாகக் கால் பதிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டன்கி படத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை தப்ஸி பண்ணு ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.