பல முன்ணனி ஸ்டார் நடிகர்களும் ஜோடி போட போட்டிபோட்ட நடிகை தான், நடிகை ஸ்ரீவித்யா. பிரபல நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடக இசை பாடகி எம்.எல். வசந்த குமாரியின் மகள் தான் இவர். ஸ்ரீவித்யா பிறந்த ஒரு வருடத்தில், அவரது தந்தை விபத்தின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் குடும்பத்தின் முழு பொறுப்பும், அவரது மனைவி எம்.எல். வசந்த குமாரியிடம் இருந்தது. மேலும், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஸ்ரீவித்யா தனது 14 வயதில் திரையுலகிற்குள் நுழைந்தார்.
‘திருவருட்ச்செல்வன்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீவித்யா, ‘பெட்டராஷி பெத்தம்மா’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள்’ படம், இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஸ்ரீவித்யா மற்றும் கமல் பல படங்களில் இனைந்து நடித்த நிலையில், ரியல் வாழ்க்கையிலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் ஸ்ரீவித்யாவின் தாய், இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவரும் தங்களின் காதலை முறித்துக் கொண்டனர்.
இதையடுத்து, மலையாள இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை ஸ்ரீவித்யா 1978-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், தனது கணவருக்காக அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்துள்ளார். ஆனால் மீண்டும் அவருக்கு ஏற்பட்ட பொருளாதார குறைபாடு காரணமாக அவர் மீண்டும் சினிமாவில் நுழைந்தார். பின்னர், அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 1980ல் விவாகரத்து பெற்றனர். பின்னர், 2003 ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீவித்யா தான் நடித்து சேர்த்து வைத்த கோடிக்கணக்கான சொத்துக்களை இசை, நடனக் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கினார். மேலும், அறக்கட்டளை ஒன்றை நடிகர் கணேஷின் உதவியுடன் நிறுவி, அதில் தகுதியானவர்களுக்கு உதவிகள் செய்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய நடிகை ஸ்ரீவித்யா, 2006 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.