ஒரு கிலோ தேங்காய் ரூ.75 வரையிலும், சில்லரை விற்பனையில் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினசரி 15 முதல் 18 லாரிகள் மூலம் சுமாா் 250 டன் அளவுக்கு தேங்காய் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சுமாா் 70 டன் அளவிலான தேங்காய்கள் மட்டுமே விற்பனைக்காக வருவதால், விலையும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, மொத்த விற்பனையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.75 வரையிலும், சில்லரை விற்பனையில் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில், ஒரு தேங்காய் சராசரியாக ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறுகையில், ”தேங்காய் அதிகமாக பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் மகசூல் செய்யப்படுகிறது.
தென்னை மரங்களில் பூச்சி தாக்குதல் இருப்பதால், உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தேங்காய் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதற்கிடையே, பல தென்னை உற்பத்தியாளா்கள் இளநீரை விற்பனை செய்வதில் ஆா்வம் காட்டி வருவதால், தேங்காய் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயா்வு இன்னும் இரண்டு மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது” என்றனர்.