ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2ஆம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துக் கொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும் அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.
ஆதித்யா-எல்1 சுற்றுப்பாதை உயரம் 4 முறை மாற்றப்பட உள்ள நிலையில் கடந்த 3ம் தேதியன்று முதல் முறையாக உயரம் வெற்றிகரமாக மாற்றப்பட்டது. பின்னர் கடந்த 5-ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டு 282 கி.மீ x 40,225 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தது. இந்நிலையில் ஆதித்யா எல்1 புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக
வெற்றிகரமாகச் செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோவின் பதிவில் “ஆதித்யா-எல்1 மிஷன்: புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக (EBN#3) பெங்களூரு ISTRAC இலிருந்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. மொரீஷியஸ், பெங்களூரு, SDSC-SHAR மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்கள் இந்த செயல்பாட்டின் போது செயற்கைக்கோளைக் கண்காணித்தன. புதிய சுற்றுப்பாதையை அடைந்தது. 296 கிமீ x 71767 கிமீ ஆகும். அடுத்த அதிகரிப்பு (EBN#4) செப்டம்பர் 15-ஆம் தேதியன்று மதியம் 02:00 மணி IST இல் திட்டமிடப்பட்டுள்ளது” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.