எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் இணைந்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள அதிமுக, மக்களவைத் தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிட தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் பக்கம் கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், புரட்சித் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் இணைத்துள்ளது.
மேலும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று தேமுதிகவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து பாமகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைவதாக உறுதியளித்துள்ளன. இதனால் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியில் உள்ளார்.
இப்படி சிறு சிறு கட்சிகளையும் விட்டு விடாமல், வாக்கு வங்கி உள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு ஒரு மெகா கூட்டணியை அமைக்க அதிமுக முயன்று வருகிறது. மேலும் பல்வேறு அமைப்புகளும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அதன் நிர்வாகிகள், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்தனர்.
தமிழ்நாடு முத்தரையர் சங்கத்திற்கு புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவு வாக்குகள் உள்ளன. முத்தரையர் சங்கத்தின் ஆதரவால் இந்த பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குகள் பெருக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.