2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, கடந்த தேர்தல்களில் பயணித்து அதே கூட்டணி கட்சிகளுடன் இந்த தேர்தலையும் எதிர்கொள்ள இருக்கிறது.
திமுக கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு இறுதி கட்ட பேச்சுவார்த்தையை எட்டி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த தேர்தல்களில் ஒரே கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக(ADMK) மற்றும் பாஜக இந்த முறை தனித்தனியாக போட்டியிடுகிறது. எனவே இந்த இரண்டு கட்சிகளும் தங்களது தலைமையில் கூட்டணியை அமைக்க மற்ற கட்சிகளுடன் தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அவை மாநில கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக(ADMK)வுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகமான வாக்கு வங்கியை கொண்டிருக்கும் பாமகவை தங்கள் பக்கம் இருப்பதற்கு அதிமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் முயற்சி செய்து வருகிறது. எனினும் பாமக இந்த முறை மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் பாமக மற்றும் அதிமுக இடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தர்மபுரி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவை தவிர மாநிலங்களவை உறுப்பினருக்கு ஒரு சீட் கேட்டிருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றிற்கும் அதிமுக சம்மதித்தால் பாமக மற்றும் அதிமுக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.