தனது மருமகளிடம் வரதட்சனை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபி கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சோளிங்கநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்தவர் கே.பி கந்தன்
இவரது மகன் கே.பி.கே சதீஷ்குமார் சென்னை பெருநகர மாநகராட்சியில் 182-வது அதிமுக வார்டு உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு சென்னை அம்பத்தூர் சேர்ந்த மரக்கடை வியாபாரியான ஸ்ரீகாந்த் என்பவரது மகள் ஸ்ருதி பிரியதர்ஷினி என்பவருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிரியதர்ஷினி சென்னையில் நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தின் போது மகளுக்கு வரதட்சணையாக 600 பவுன் நகையும் 2 சொகுசு கார்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மேலும் 400 பவுன் நகை கேட்டு மிரட்டுவதாக முன்னாள் எம்எல்ஏ வின் மருமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரில் திருமணமான புதிதில் தனது மகளும் மருமகனும் சந்தோசமாக இருந்ததாகவும் அதன் பிறகு மருமகனின் சகோதரி இந்துமதி மற்றும் அவரது தாயார் தனது மகளை நான் ஒரு பவுன் நகை கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தனது மகளின் சமூக வலைதள பக்கங்களில் இருக்கும் அவரது நண்பர்களுடன் இணைத்துப் பேசி அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். வரதட்சணை கொடுக்காவிட்டால் தங்கள் மகளுடன் வாழ முடியாது என தனது மருமகன் சதீஷ்குமார் விரட்டுவதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.