புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் டோகன் சாஹு; நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு ஆகியவை தொழில், கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளுடன் தொடர்புடைய ஒன்றோடொன்று இணைந்த நிகழ்வுகளாகும். இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இடம் பெயர்ந்தவர்கள் உட்பட நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் கணக்கெடுப்பதாகும். கடைசியாக 2011-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இடபபெயர்வு பற்றிய எந்தத் தரவையும் பராமரிக்கவில்லை. ஜூலை 2020 இல் நகர்ப்புற புலம்பெயர்ந்தோர்/ஏழைகளுக்கு அவர்களின் பணியிடத்திற்கு அருகில் கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதற்காக பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் துணைத்திட்டமாக மலிவு வாடகை வீட்டு வளாகங்களை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் இரண்டு மாதிரிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் இயக்கம் மற்றும் ராஜீவ் வீட்டுவசதி திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்டுள்ள அரசு நிதியுதவியுடன் கூடிய காலியான வீடுகளைப் பயன்படுத்தி, பொது, தனியார் கூட்டாண்மை அல்லது பொது முகமைகள் மூலம் வாடகை வீடுகளாக மாற்றுதல் மற்றும் பொது/தனியார் நிறுவனங்களால் இந்த வீடுகளின் கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.