ஃபெஞ்சல் புயல், சென்னை முதல் புதுச்சேரி வரை பல மாவட்டங்களை அலற விட்ட நிலையில், கொங்கு மண்டலத்திற்கு இன்று மாலை முதல் சம்பவம் காத்திருக்கிறது என கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபெஞ்சல் புயல் சின்னமானது புதுச்சேரி அருகே தொடர்ந்து அதே இடத்தில் நகராமல் நீடித்து வருகிறது. அரபிக் கடல் உயர் அழுத்தம் சற்று வலுவிழந்து காணப்படுவதால் இந்த புயல் சின்னத்தை மேற்கு நோக்கி நகற்ற சற்று காலதாமதம் ஆகியுள்ளது. இந்த புயல் சின்னமானது மதியத்திற்கு மேல் மேற்கு நோக்கி நகர்ந்து கொங்கு மண்டலம் வழியாக நாளை அரபிக் கடலுக்கு சென்றடையும்.
இந்த நிகழ்வு மேற்கு நோக்கி நகர சற்று கால தாமதமாவதால் கொங்கு மண்டலத்தில் மழை தொடங்க இன்று மாலை/ இரவு ஆகிவிடும். மாலை/ இரவு தொடங்கும் மழை படிப்படியாக அதிகரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழையாக பெய்யக்கூடும். புதன்கிழமை வரை கொங்கு மண்டலத்திற்கு மழை வாய்ப்பு அதிகம். விவசாயிகளும் பொதுமக்களும் தங்களது வானிலை அறிவிப்புக்கு ஏற்ப தங்களது பணியை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார். கோவையில் 1977க்கு பிறகு பெய்யக்கூடிய புயல் மழையாக இது இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவசர உதவி எண் : கோவையில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது; 1077 மற்றும், 0422 – 2306051 என்ற எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அவசர கட்டுப்பாடு மைய எண்: 0422 – 2302323, வாட்ஸ்அப் எண்: 81900 00200
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை : அத்தியாவசியத் தேவை தவிர, இதர பணிகளுக்காக, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து, வீடுகளில் இருக்க வேண்டும். அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாலோ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, கிரேன்களை கீழே இறக்கி வைக்க வேண்டும் அல்லது உறுதியாக நிலை நிறுத்த வேண்டும். விளம்பர பலகைகளை பாதுகாப்பாக இறக்கி வைக்க வேண்டும். நீர் நிலைகளில் துணி துவைக்கவோ, குளிக்கவோ, நீந்தவோ, மீன் பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ மற்றும் செல்பி எடுக்கச் செல்வதையோ தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரைகள் மற்றும் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மழைக்கு முன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
உயர் மின்சாரம் செல்லக்கூடிய மின் கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்; மின் சாதனப் பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். பழுதடைந்த, சிதிலமடைந்த கட்டடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், வீட்டுக்குள் தண்ணீர் சூழ்ந்தால், நிவாரண முகாம்களில் தங்க விரும்பும் பட்சத்தில், 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தரைப்பாலங்களில் வெள்ள நீர் செல்லும்போது, அவ்வழியாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். வால்பாறை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு, அணைக்கட்டுகள், நீர் வீழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read more : கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.. வெளியான ஹேப்பி நியூஸ்..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?