ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. இது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்ஸ் மூலம் கமாண்ட் செய்தால் தேவையான பதில்களை அளிக்கும். இதன்மூலம் கடினமான வேலைகள் எளிதாகும் சூழல் வந்துவிட்டது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தே தேவைப்படும் விஷயங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனால் பல்வேறு துறைகள் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டன.
அதேசமயம் ஏ.ஐ வருகையால் ஊழியர்கள் வேலையிழப்பிற்கு வாய்ப்பிருப்பதாக ஒருவித அச்சம் நிலவுகிறது. ஆனால் இது புதிய கதவுகளை திறந்துவிடும். வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் அரசு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியில் கோவா மாநில அரசு களமிறங்கியுள்ளது. இதை மட்டும் அமல்படுத்தி விட்டால் ஏ.ஐ அறிமுகம் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை கோவா பெற்றுவிடும்.
இதுதொடர்பாக கோவா சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே, அரசு துறைகளில் குடிமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஏ.ஐ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் அரசின் செயல்பாடுகள் சிறப்பான முறையில் மேம்படுத்தப்படும். முதல்கட்டமாக Chatbots-கள் சுற்றுலா, பொதுமக்கள் குறைதீர்க்கும் துறைகளில் செயல்படுத்தப்படும். இதில் மிகப்பெரிய எழுச்சியை அடையும். வளர்ச்சியின் படிநிலைகளில் புதிய புரட்சியை உண்டுபண்ணும். ஐடி துறையினருக்கு சிறப்பான பணிச்சூழலை அளிக்க Workation Goa என்ற பெயரில் கோவா தயாராகி வருகிறது.