அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.வைத்திலிங்கம், இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமனம் செய்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 10 பேர் நீக்கப்படுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிறுணியம் பலராமன், எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், ரவிசந்திரன், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, கிருஷ்ணமுரளி மற்றும் விஎஸ் சேதுராமன் ஆகியோரை நீக்கி ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுகவில் தொடரும் போட்டி நீக்க அறிவிப்புகளால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக நியமனம் மற்றும் நீக்க அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதனால், தொண்டர்களிடையே கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.