விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சி நிர்வாகி ஒருவரை ‘பளார்’ என அரை விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் கூட்டத்தில் அடிதடி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அந்தியூர் நிர்வாகிகளை தொடர்ச்சியாக அதிமுக கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து வருவதாக ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தவரை அடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
கூட்ட அரங்கில் இருந்த நாற்காலிகள் தூக்கி வீசி மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய செங்கோட்டையன், புகார் தெரிவித்தவர் அதிமுக உறுப்பினரே கிடையாது. வேண்டுமென்றே பிரச்சனை செய்யும் நோக்கில் கூட்டத்துக்கு வந்துள்ளார் எனத் தெரிவித்தார். இந்த மோதலில் நாற்காலிகளும் பறந்தன. செங்கோட்டையன் தரப்புடன் மோதலில் ஈடுபட்டவர்கள், எடப்பாடி பழனிசாமியால் அண்மையில் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தகராறு செய்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் விரட்டி அடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒருமையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்
அதேபோல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மேடைக்கு கீழே இருந்த ஒருவர் திண்டுக்கல் சீனிவாசனைப் பார்த்து இதை பேசுங்கள் அதை பேசுங்கள் என அறிவுறுத்திக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், ”டேய் மடையா பேசுறத கேளுடா மடையா… சொல்றதை கேளு. அதை சொல்றதுக்கு தான் வந்திருக்கோம். நீங்க அங்க உக்காந்துகிட்டு யோசிக்கிறதை இங்க எனக்கு பேச தெரியாதா..? பாதி பாதியா கேட்டா எப்படி. முட்டாப் பயலா இருக்கியே நீ” என காட்டமாக பேசினார். இது அங்கிருந்த நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், விருதுநகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்ட நிலையில், அவருக்கு பொன்னாடை அணிவிக்க மேடையில் அதிமுக நிர்வாகிகள் வரிசையில் வராமல் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த ராஜேந்திர பாலாஜி விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமாரை ‘பளார்’ என கன்னத்தில் அறைந்தார். காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#JUSTIN அதிமுக பொதுக்கூட்ட மேடையில்
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 6, 2025
அதிமுக நிர்வாகியை கன்னத்தில் அறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி#RajendraBalaji #ADMK #Virudhunagar #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/aG49xP55YZ