”சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை” என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுக்குழு – செயற்குழு கூட்டம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடத்திய பொதுக்குழுவை போலவே முறையாக நடத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களும் 23 தீர்மானங்களை நிராகரித்தனர். பின்னர் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 100 பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றுள்ளார். உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முழுமையான தீர்ப்பு நகல் கிடைக்கப் பெறவில்லை. இதில் பின்னடைவு இல்லை. நீதிபதி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். இது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

முன்னதாக, ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. அது தொடர்பாக வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டார். அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம்” என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.