அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என்றும் இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று துவங்கி நடைபெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2ல் குறிப்பிட்டுள்ளவாறு கழகப் பொதுச் செயலாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப கழகப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விரும்புபவர்கள், கால அட்டவணையின்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கட்சி சட்ட விதி-20அ;பிரிவு-1,(a),(b),(c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.
கட்சியின் பொதுச் செயலாளர், பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 18ம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பிக்கிறது. மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20ம் தேதியாகும். வேட்பு மனு திரும்ப பெறுதல் மார்ச் 21 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு மார்ச் 26 அன்று நடைபெறும் என்றும் மார்ச் 27ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.