அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி
ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமலும் வழக்கை நிராகரித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால், தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் விசாரணைக்கு வர உள்ளது.