அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இன்று (ஏப்ரல் 10) சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ளது. ஆனால், இப்போதிலிருந்தே அரசியல் களம் சூடாகி வருகிறது. இதில் முக்கிய நகர்வாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இது 2026 தேர்தலில் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் நியமனம் குறித்த பேச்சுக்கள் கடந்த இரண்டு வாரங்களாகவே பேசுபொருளாகி உள்ளது. தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்படுமா..? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமித் ஷாவின் தமிழ்நாடு வருகையையொட்டி, நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, 5 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், யாரும் வீட்டிற்கு போக வேண்டாம். அனைவரும் சென்னையிலேயே இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளாராம்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே இருக்க உத்தரவு போட்டுள்ளாராம். ஆனால், செங்கோட்டையனுக்கு இதுதொடர்பான உத்தரவு செல்லவில்லை என்றும், ஆனால், அவர் சென்னையில்தான் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், தங்கமணி சென்னையில் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, வரிசையாக பாஜக தலைவர்களை சந்தித்து வரும் செங்கோட்டையன், சென்னை வரும் அமித்ஷாவையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய்களை நகர்த்துவாரா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.