தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது. 66 வயதான இவர், மெக்காவுக்கு புனித பயணம் சென்றுவிட்டு, இன்று அதிகாலை GULF AIRWAYS விமானம் மூலம் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்தார். இந்த விமானம் சென்னை அருகே பறந்து வந்து கொண்டிருந்தபோது, நடுவானில் ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு விமான சிப்பந்திகள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
விமானம் அவசர தரையிறக்கம் : இதைத் தொடர்ந்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து விமானம் தரையிறங்க அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினார். அதன்படி, இன்று அதிகாலை 3.15 மணிக்கு GULF AIRWAYS விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், விமானத்தில் ஏறி ராஜா முகமதுவை பரிசோதித்ததில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்தது வந்த விமான நிலைய போலீசார், ராஜா முகமதுவின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விமானத்தில் பயணி பலியான விவகாரம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.