‘இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும்’ என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி நவாஸ் கனி, “ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை பாஜகவை எதிர்த்து நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றோம். மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை திமுக தலைமையிலான கூட்டணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். கடந்த முறை மீனவர்களின் நலனை முன்னிறுத்தி ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் பேசியிருக்கிறோம்.
அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கச்சத்தீவு பகுதியிலே மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமையை வாங்கி தருவதுதான் அதற்கான தீர்வாக இருக்கும். ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து, எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகளை இன்னும் செய்யவில்லை. இந்திய கூட்டணியிலான அரசு வரும்போது ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.