கவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். வேட்டையாடு விளையாடு படம் ரிலீஸாகி 15 ஆண்டுகள் கழித்து அண்மையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. புதுப்படங்கள் வெளியான போதிலும் வேட்டையாடு விளையாடு படம் ஓடிய தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீண்டும் ரிலீஸாகி வெற்றி பெற்ற வேட்டையாடு விளையாடு படத்திற்காக கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
படத்தின் வெற்றியை கவுதம் மேனன், மாணிக்கம் நாராயணன் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் பற்றி மாணிக்கம் நாராயணன் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 1996, 97ல் என்னை பார்க்க வந்தார் அஜித் குமார். என் அப்பா, அம்மா மலேசியா, சிங்கப்பூர் செல்ல வேண்டும். அதற்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்றார். எவ்வளவு வேண்டும் என கேட்டதற்கு ரூ. 6 லட்சம் என்றார் அஜித்.
என் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாகவும், தன் சம்பளத்தில் இருந்து ரூ. 6 லட்சத்தை கழித்துக்கொள்ளுமாறும் கூறினார். நானும் சரி என்று பணம் கொடுத்தேன். ஆனால் அந்த பணத்தை இன்றுவரை திருப்பிக் கொடுக்கவில்லை.
மேலும் எனக்கு படம் நடித்துக் கொடுக்கவும் இல்லை. இத்தனை ஆண்டுகளில் அந்த பணம் பற்றி அஜித் பேசவே இல்லை. அவர் தன்னை ஜென்டில்மேன் என்கிறார். ஆனால் அவர் ஜென்டில்மேன் இல்லை. வெடிமுத்து படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் அஜித். பின்னர் திடீரென்று அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தான் நடித்த ரெட் படத்தை என்னை விநியோகிக்குமாறு கூறினார். நானும் ரூ. 40 லட்சம் கொடுத்து அந்த ரெட் படத்தை வாங்கி விநியோகம் செய்தேன். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தாதல் எனக்கு நஷ்டம் தான்.
அப்பொழுது அஜித்தை பார்க்கச் சென்றேன். இப்போ எனக்கு நேரம் சரியில்லை. பிறகு உங்கள் படத்தில் நடிக்கிறேன் என கூறி அனுப்பி வைத்துவிட்டார். என் மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க அஜித்துக்கு உடை வாங்கிக் கொண்டு அவரை சந்திக்க சென்றேன். அவர் என்னை சந்திக்கவில்லை. எனக்கு படம் பண்ணவும் இல்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவும் இல்லை. இதையடுத்து நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் செக் நம்பர், டிராஃப்ட் எல்லாம் கொடுங்கள் என்று கேட்டார். அவருக்கு நான் ரூ. 6 லட்சம் கொடுத்த ரெக்கார்டு என்னிடம் உள்ளது.
அப்படி இருக்கும்போது நான் பணம் வாங்கவில்லை, நாராயணன் நான் பணம் வாங்கியதாக தெரியாமல் கூறுகிறார். அது கடவுளுக்கே தெரியும் என அஜித் கூறியிருக்கிறார். அஜித்துக்கு பணம் கொடுத்த செக் நம்பர் என்னிடம் இருக்கிறது. பணம் வாங்கியது குறித்து என்னிடம் பேசியிருக்க வேண்டும். இல்லை பணத்தை திருப்பிக் கொடுக்க மாட்டேன் என கூறியிருக்க வேண்டும். யாரையும் சந்திக்காமல் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அஜித் குமார், அவரை தூக்கிவிட்ட தயாரிப்பாளர்களை மறந்து நன்றி கெட்டு நடந்து கொள்கிறார். அவர் ஜென்டில்மேனாக இருந்திருந்தால் என்னிடம் பேசியிருக்க வேண்டும். அவர் ஜென்டில்மேன் இல்லை என்றார்.