பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் , அவ்வப்போது மோட்டார் சைக்கிள் பயணம் செல்வது வழக்கம். அஜித்தும் அவரின் பைக் பயணமும் பிரிக்கமுடியாத ஒன்று. எப்போதெல்லாம் சூட்டிங் இல்லாமல் ஓய்வில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் பைக்கில் கிளம்பிவிடுவார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் நடிகர் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை அவர் சென்று வந்த இடங்கள் குறித்து சமீபத்தில் ஒரு ரூட் மேப் வெளியானது.
இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்திற்கு அஜித் மோட்டார் சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது. தென்காசியில் இருந்து மதுரை நோக்கி இடைகால் பகுதியில் உள்ள திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அஜித்தின் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருக்கும் போது, அதை பார்த்த சில இளைஞர்கள் அவருடன் சேர்த்து செல்பி எடுத்துள்ளனர். மேலும், அஜித்திற்கு வணக்கம் செலுத்தும் அந்த இளைஞர்களுக்கு, அவரும் திருப்பி வணக்கம் செலுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் துணிவு படமும் விஜய் நடிப்பில் வாரிசு படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் விஜய் படங்கள் நேரடியாக மோதவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.