ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் கேபிள் அறுந்து கோபுர ராட்டினம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் பொருட்காட்சியைக் காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொழுதுபோக்கிற்கு என ராட்டினங்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று பொருட்காட்சி வழக்கம் போல் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தது. மக்களும் உற்சாகமாக கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கோபுர ராட்டினத்திலும் மக்கள் உற்சாகமாக ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது கீழிருந்து வேகமாக மேல் நோக்கிச் சென்ற கோபுர ராட்டினம் அதன் கேபிள் அறுந்ததால் மேலிருந்து வேகமாக கீழே விழுந்தது. இதனால் சுற்றி நின்று அதை ரசித்துக் கொண்டிருந்தவர்களும் அந்த ராட்டினத்தில் இருந்த மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராட்டினம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நல்லவேளையாக எந்த உயிரிழப்பு சம்பவங்களும் நிகழவில்லை. இந்த விபத்து சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராட்டினத்தை சுற்றி நின்று ரசித்து கொண்டிருந்த மக்களும் ராட்டினம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதால் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது.