கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றிருந்தார். அண்மையில் ‘ஒஎம்ஜி 2’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், 55 வயதாகும் அக்ஷய் குமார் கடந்த 2000இல் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றார்.
அதன் பின், பல படங்களில் இந்திய நாட்டின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமான அவர் நடித்து வந்த போதிலும், அவர் மீது ஒரு தரப்பினர் இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், சுதந்திர தினமான இன்று இந்தியக் குடியுரிமையைப் தான் பெற்றுள்ளதாக அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், தன்னை இந்திய குடிமகனாக அறிவிக்கும் ஆவணங்களின் படத்தை பதிவிட்டுள்ளதோடு, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்! எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் வேண்டி அக்ஷய் குமார் விண்ணப்பித்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், கொரோனா காரணமாக அதை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக அவர் அறிவித்துள்ள தகவல் ரசிகர்கள் இடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.