ஜல்லிக்கட்டு விளையாட்டில் பலர் உயிரிழந்தாலும் இந்த விளையாட்டின் ஆர்வமும், விறுவிறுப்பும் குறையாமல் பல தடைகளை தாண்டி நடந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மதுரை மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையின்போது நடக்கிறது. ஆனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலக பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது.
தற்போது டிவிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் வாடிவாசலை தாண்டி தமிழகத்தின் பிற மாவட்ட பார்வையாளர்களும் இந்த போட்டியையும், திமில்களை பிடித்து அடக்கும் காளையர்களின் வீரத்தையும், அடங்க மறுத்து திமிறி எழும் காளைகளின் வீரத்தையும் பார்க்க முடிகிறது. கிரிக்கெட் போட்டியை போல், ஜல்லிக்கட்டுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் நேரடியாக அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் இந்த போட்டியை காண்பதில் சிக்கல் நிலவுகிறது.
அந்த குறையை போக்கும் வகையில், தற்போது அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66.8 ஏக்கரில் 4,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் ரூ.44 கோடியில் 3 தளங்களுடன் பிரமாண்ட மைதானம் உலக தரத்தில் கட்டப்படுகிறது. பார்வையாளர்கள் அமர பாதுகாப்பான கேலரிகள் ஹைடெக் வடிவில் அமைக்கப்படுகின்றன. தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன.
16,921 சதுர அடியில் அமைக்கப்படும் முதல் தளத்தில் விஐபிகள் அமரும் அறை மற்றும் அவர்கள் தங்கும் அறைகள், உணவு வைப்பு அறைகள் இடம்பெறுகிறது. 9,020 சதுர அடியில் அமைக்கப்படும் 2ஆம் தளத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைப்பதற்கான அறையும், 1,140 சதுர அடியில் அமைக்கப்படும் 3ஆம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு மைதான வளாகத்தில் அருங்காட்சியகம் அமைகிறது. அதில், ஜல்லிக்கட்டு மட்டுமில்லாது பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், கபடி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் காட்சிப்படுத்தும் பணிகள் நடக்கிறது.