Election Alert: மக்களவை தேர்தல் நாளை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் என்னென்ன இயங்கும் இயங்காது என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்
இந்தியாவின் மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறவுள்ளது. அதன்படி நாளை (ஏப்ரல் 19-ம் தேதி) தொடங்கும் தேர்தலானது ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 19ம் தேதி சென்னை, டேராடூன், இட்டாநகர், ஜெய்ப்பூர், கோஹிமா, நாக்பூர் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கி விடுமுறை விடுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் வாக்களிக்கச் செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளன.
இதேபோல், நாகாலாந்து மாநிலம், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்களிக்கும் நாளில், அரசு, தனியார் மற்றும் வணிகத் துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கட்டாயமாக்கியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடியவிடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
அதனால் அன்றைய தினம் அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள், டாஸ்மாக் கடைகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஆனாலும் மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பால் பூத்துகள் உள்ளிட்டவை இயங்கும் என்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் நேராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தான். தேர்தல் முடிந்த மறுநாள் ஏப். 20ஆம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். அதன்பின், ஏப்.21 மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது இன்று இரவு முதல் ஏப்.21-க்கு இடையில் ஒருநாள் மட்டுமே டாஸ்மாக் இயங்கும்.
இதேபோல், மக்களவை தேர்தல் 2024 மற்றும் 233ல் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற விலவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 2024, ஏப்ரல் 19ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வாக்குகள் செலுத்துவதற்கு ஏதுவாக அன்றைய தினம் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் அரசு போக்குவரத்து துறைக்கு விடுமுறை இல்லை. தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் தபால் முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள குயின்ஸ்லேண்ட், எம்ஜிஎம், விஜிபி உட்பட பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் உள்ள 1000க்கு மேற்பட்ட கடைகளுக்கு விடுமுறை ஆகும். மார்க்கெட்டில் பணிபுரியும் வணிகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுபவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வகையில் நாளையும், நாளை மறு தினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே சில்லறை காய்கறி, பழங்கள் விற்பனையாளர்கள் அவர்களது கடைகளுக்கு தேவையான காய்கறிகளை இன்றே வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 1168 திரையரங்குகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் 19ம் தேதி மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: விஜய்யின் சர்கார்!… உங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டால் என்ன செய்வது?