அனைத்து ஆவணங்களிலும் ஒரே மாதிரியான விவரங்களை கொண்டிருக்கும் வகையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அந்த மாற்றங்கள் தானாகவே மற்ற ஆவணங்களிலும் புதுப்பிக்கப்படும் புதிய சேவையை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆவணங்களிலும் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் ஒரு பிழை போன்ற மாற்றங்கள் இருக்கும். இந்த விவரங்களை திருத்துவது கடினம் என்பதால், விவரங்களை மாற்ற ஒவ்வொரு ஆவணத்திற்கும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இதனை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய சேவையை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அமைப்பை வடிவமைத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய அமைப்பின் மூலம், ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அந்த மாற்றங்கள் தானாகவே மற்ற ஆவணங்களிலும் புதுப்பிக்கப்படும். அதாவது உங்களது விவரங்களை ஆதார் அட்டையில் அப்டேட் செய்தால் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் அவை புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ஆவணங்களும் ஒரே மாதிரியான விவரங்களைக் கொண்டிருக்கும். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போக்குவரத்து, ஊரக மேம்பாடு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இந்த புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வழங்கும் துறைகளிடம் முதலில் ஐடி துறை ஆலோசித்து முடிவெடுக்கும். பின்னர் இந்த புதிய சேவைகள் பாஸ்போர்ட் போன்ற பிற ஆவணங்களுக்கு கிடைக்கும் வகையில் புதிய சேவை வடிவமைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.