தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான நடைமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்ற பலரும் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில், உள்ளனர். பயணிகள் சிரமம் இன்றி திரும்புவதற்கு ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 300 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யக்கூடிய பயணிகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளது.
ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். எந்தவித சிரமமும் இல்லாமல் பயணிகள் பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை அனைத்து பேருந்து பணிமனைகளுக்கும் போக்குவரத்துத்துறை வழங்கியுள்ளது. கோயமுத்தூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களிலும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.