தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
கிராம சபை கூட்டங்கள் ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கூட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் ‘கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் முதுகெலும்பு’ எனக் கூறிய மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளான இன்று கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டங்கள் இன்று காலை 11 மணியளவில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்….
1. கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும். 2020 – 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
2. 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 பேருக்கு மேல் கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. 3-18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
4. உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றாலும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு.
5. கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
6. ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை கூட்டம் குறித்த தகவலை தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
7. தமிழக அரசு கிராம சபை கூட்டம் தெரிவித்தும், நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.
8. மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்.
9. கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது. தீர்மானம் சரி அல்லது தவறு முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டும்.
10. கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்றால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் தனி பிரிவு – எண்… 044 25672345, 044 25672283, 9443146857