புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தமிழக பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2011இல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு, CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 2014-15ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிற்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2018-19ஆம் கல்வியாண்டில் 5ஆம் வகுப்பு வரை மட்டும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6ஆம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டம் விரிவாக்கப்படவில்லை. அதனை இந்த கல்வி ஆண்டில் இருந்து 6ஆம் வகுப்பில் CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுச்சேரி கல்வித்துறை சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், புதுச்சேரி அரசு பள்ளிகளில் இந்தாண்டு 9ஆம் வகுப்பு வரை CBSE பாடத்திட்டத்தினை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.