நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர்கேபிள் மூலமாக இணைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்திக்குறிப்பில்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதிவேக இணையதள இணைப்பு வழங்க பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டம், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக அனைத்து வட்டாரங்களும், கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன. ஆப்டிகல் பைபர் கேபிள்கள் 85 சதவீதம் மின் பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் அமைக்கப்பட உள்ளன.
இப்பணிகள் நிறைவடைந்ததும் கிராமப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை இணைப்புகள், வைபை வசதி ஏற்படுத்துதல், தனிநபர் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கல், அகண்ட அலைவரிசை இணைப்புகளை குத்தகைக்கு விடுதல் மற்றும் செல்போன் டவர்களுக்கு இணைப்புகள் வழங்குதல் ஆகிய முன்னேற்றம் அடைந்த தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதன் தொடர்ச்சியாக அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையங்கள் மற்றும் வட்டார ஊராட்சி சேவை மையங்கள் இத்திட்டத்தின் இருப்பு புள்ளியாக மாற்றப்பட்டுள்ளன. இச்சேவை மையங்களில் இருந்து 3 கிமீ சுற்றளவுக்குள் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள இணையதள வசதிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணி முடிந்தவுடன் கிராம ஊராட்சி சேவை மையங்களில் இருந்து ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் 1 ஜி.பி.பி.எஸ். அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
கிராம ஊராட்சி சேவை மையங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், பராமரிப்புக்கும் அந்தந்த கிராம ஊராட்சி செயலாளர்களை ஒரு முனை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருவாய் துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசு சார்ந்த திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் பெற தற்போது இ-சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை மூலமாக கிராம ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் மற்றும் கட்டிட அனுமதி ஆகியவற்றுக்கான கட்டணங்களை இணையதளம் மூலமாகவே பொது மக்கள் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறி உள்ளதால், அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் விரைவான அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் புரட்சியை ஏற்படுத்தும் சிறப்பு மிக்க இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும்,விவசாய பெருமக்களும், பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.