உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்திருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
வாரணாசியின் ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்த வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மசூதியின் விவகாரங்களைக் கவனிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருந்தது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து இந்தத் தீர்ப்பு எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வழக்கை விசாரித்த நீதிபதி நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்தி வைத்திருப்பதாக அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் வழக்கறிஞர் நக்வி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவை ஒத்தி வைத்ததாக தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மசூதியின் பாதாள அறையில் தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.