அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 4ஆம் தேதி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டு குழுவினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றியும், ஜெயலலிதா பற்றியும் தொடர்ந்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகிறார். இதற்கு அதிமுக மூத்த நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
ஆனால், டெல்லி தலைமையோ தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. அதனால், வரும் 4ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.