தனிக்கட்சி ஆரம்பித்த சசிகலா சகோதரர் திவாகரன் மீண்டும் தன் சகோதரியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் பொருட்டு, அவரது அணித் தரப்பில் நாளை பொதுக்குழு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஓபிஎஸ் அணி அவர்களை எதிர்த்து தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு நடுவே, சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொண்டர்களை சந்தித்து வருகிறார். ‘சிலரின் சுயநலத்துக்காக கட்சியை கூறுபோடும் நிலை ஏற்பட்டுள்ளது. நான்தான் அதிமுக பொதுச்செயலாளர். விரைவில் தலைமை கழகத்தை கைப்பற்றுவேன்,’ என்று சசிகலா கூறியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறிது காலம் சசிகலா, அவர் சகோதரர் திவாகரன், டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டாலும் பிறகு தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்தக் கட்சியை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சசிகலா அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சின்னம்மா தலைமையில் அதிமுகவோடு, அதிக-வை இணைக்கும் விழா தஞ்சையில் வரும் 12ஆம் தேதி காலை 11 மணியளவில் ஓர் திருமண மண்டபத்தில் நடைபெறும்”. என கூறப்பட்டுள்ளது.