கோவை மாவட்டம் போத்தனூர் சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் கமீலா பானு (34). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருக்கும், பெயிண்டர் சலீம் (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சலீமுக்கும் திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சலீமும், கமீலா பானுவும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, சலீம் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சலீமுடன் பேசுவதை கமீலா பானு நிறுத்திவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சலீம், ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
மேலும், கமீலா பானுவின் அக்காவை சந்தித்து, நாங்கள் இருவரும் ஆபாசமாக இருந்த ஃபோட்டோ, வீடியோக்கள் உள்ளன எனக்கூறி காட்டினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தங்கை கமீலா பானுவை கண்டித்துள்ளார். இதனால், மனம் உடைந்த கமீலா பானு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து விசாரணை நடத்திய போலீசார், சலீமை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி ரோடு பகுதியில் சலீம் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். விசாரணையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.