நேற்று மக்கள் அவையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை குறிக்கும் விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக மாநிலங்கள் அவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள்.
கடவுளின் பெயரை பலமுறை சொன்னால் அவர்களுக்கு சொர்க்கத்தில் ஆவது இடம் கிடைக்கும். அம்பேத்கரின் பெயரை நீங்கள் 100 சதவீதம் பயன்படுத்துங்கள். ஆனால் அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தது. இந்த நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்… அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என கூறியிருந்தார்.