பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமைகள் இந்தியாவில் நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சொல்லப்பட்டாலும், அந்த நடவடிக்கை கட்டுப்படுத்தவில்லை என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது.
அந்த வகையில், ராமநாதபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாக தெரிவித்து, கழிவறைக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது.
ஆகவே அவரை அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அவருடைய தாயார் அழைத்துச் சென்றார். இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று, அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அவரை கவனித்துக் கொண்டிருந்த செவிலியர், வேறொரு நோயாளியை பார்ப்பதற்காக வெளியே சென்று விட்டார்.
அப்போது ஆம்புலன்ஸ் உதவியாளர் பாலமுருகன் என்பவர், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாக தெரிவித்து, கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பயந்து போன அவர், அலறியபடி கழிவறையை விட்டு வெளியே ஓடி வந்தார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றாலும், தனக்கு நேர்ந்த அவலத்தை தெரிவித்து கதறி அழுதுள்ளார் அந்த பெண்மணி.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தது. அதோடு ஆம்புலன்ஸ் உதவியாளர் பாலமுருகனை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்தனர்.