மூளை புற்று நோய்க்கு முக்கிய காரணமான மெத்திலீன் குளோரைடு என்ற அபாயகரமான ரசாயனத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகள் தடை செய்திருக்கிறது. இந்த முக்கியமான முடிவு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கொள்கை மாற்றத்தில் ஏற்படுத்த இருக்கும் தாக்கங்களை பற்றி ஆராயலாம்.
அமெரிக்காவின் இந்த முடிவு போதும் மக்களின் உடல் நலம் தொடர்பான நடவடிக்கைகளில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ( EPA) மூளைப் புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களுடன் தொடர்புடைய மெத்திலீன் குளோரைடு இரசாயனத்தின் பெரும்பான்மையான பயன்பாடுகளை 30-04-2024 தேதி முதல் அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. இந்த தடையானது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது மேலும் அதிபர் ஜோ பைடனின் புற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மெத்திலீன் குளோரைடு, கல்லீரல், நுரையீரல், மார்பகம் மற்றும் மூளைப் புற்றுநோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. மேலும் பல தீவிரமான உடல் நலக் கோளாறுகளுக்கும் இந்த ரசாயனம் முக்கிய காரணமாக உள்ளது. மெத்திலீன் குளோரைடு தடை செய்யப்பட்டது தொடர்பாக பேசிய இபிஏ நிர்வாகி மைக்கேல் எஸ். ரீகன் ” மெத்திலின் குளோரைடு பல குடும்பங்களின் பேரழிவிற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதன் மீதான தடை அவசியமான ஒன்று மேலும் இந்தத் தடை பாதுகாப்பற்ற நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதோடு வலுவான தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்துகிறது” என தெரிவித்தார்.
மெத்திலீன் குளோரைடின் பயன்பாடு நாடு முழுவதும் பல்வேறு குடும்பங்களின் பேரழிவிற்கு காரணமாக அமைந்தது என குறிப்பிட்ட ரீகன் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் பாதுகாப்பற்ற மெத்திலீன் குளோரைடு நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது மற்றும் மீதமுள்ள சில தொழில்துறை பயன்பாடுகளுக்கு சாத்தியமான வலுவான தொழிலாளர் பாதுகாப்பை என்ன செய்கிறது எனவும் தெரிவித்தார். இனி யாருக்கும் இந்த ரசாயனத்தால் எந்த வித பாதிப்பு ஏற்படாது என அவர் கூறினார்.
EPA நடவடிக்கைகளுக்கு யுனைடெட் ஸ்டீல் ஒர்க்கர்ஸ் தொழிலாளர் சங்கம் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறது. மெத்திலீன் குளோரைடின் தாக்கத்தால் ஆண்டிற்கு ஒரு லட்சம் தொழிலாளர்கள் பல்வேறு நோய்களால் பலியாகின்றனர். இந்த ரசாயனத்தை பயன்படுத்துவதற்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட நச்சுப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி எங்கள் தொழிற்சங்கம் போராடி வந்தது. இந்நிலையில் இபிஏ மெத்திலீன் குளோரைடின் சில பயன்பாடுகளுக்கு தடை விதித்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது என யுனைடெட் ஸ்டீல் ஒர்க்கர்ஸ் தொழிற்சங்கத்தின் தலைவர் டேவிட் மெக்கால் தெரிவித்துள்ளார்.
நச்சுப் பொருள்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (TSCA) கீழ் செயல்படுத்தப்பட்ட தடை, மெத்திலீன் குளோரைடுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களைக் குறைப்பதற்கான கூட்டு முயற்சியைக் குறிக்கிறது. கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் அத்தியாவசிய பயன்பாடுகளைத் தொடர அனுமதிக்கும் அதே வேளையில் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த ஆபத்தான இரசாயனத்திலிருந்து மேலும் தீங்கு ஏற்படுவதைத் தடுப்பதை EPA நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை மெத்திலீன் குளோரைடு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஏரோசல் டிகிரீசர்கள், பெயிண்ட் ஸ்ட்ரிப்பர்ஸ், பசைகள் மற்றும் சீலண்டுகள் போன்ற பல்வேறு தொழில்கள் மற்றும் நுகர்வோர் தயாரிப்புகளை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மெத்திலீன் குளோரைடு விஷத்தால் தனது மகனை இழந்த வெண்டி ஹார்ட்லி இந்தத் தடை சட்டம் தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் என தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற ஆபத்துகளில் இருந்து தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
1980 களில் இருந்து, மெத்திலீன் குளோரைடு வெளிப்பாட்டுடன் தொடர்புடைய பல உயிரிழப்புகள், ஒழுங்குமுறை நடவடிக்கைக்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முந்தைய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ரசாயனத்தின் பரவலான பயன்பாடு, குறிப்பாக குளியல் தொட்டியை சுத்தப்படுத்துதல் மற்றும் வண்ணப்பூச்சுகளை அகற்றுதல் போன்ற தொழில்களில் தொடர்ந்து அபாயங்களை ஏற்படுத்தியது. தற்போதைய இபிஏ-வின் இறுதி விதியானது ஒரு வருடத்திற்குள் நுகர்வோர் பயன்பாடுகளை படிப்படியாக நிறுத்துவதையும், 2 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான தொழில்துறை மற்றும் வணிக பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பாதுகாப்பான மாற்றுகளை நோக்கி ஒரு தீர்க்கமான நகர்வைக் குறிக்கிறது.