முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சியை தொடங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தவர்களில் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவர். ஜெயலலிதா கைதாகி சிறை செல்ல நேரிட்டபோது, ஓபிஎஸ் தான் முதலமைச்சராக இருந்தார். பின்னர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அவரே முதல்வரானார். ஆனால், இந்த பதவி இரண்டு மாதங்கள் கூட நீடிக்கவில்லை. சிலரின் நிர்பந்தத்தால் முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்து தர்மயுத்தம் நடத்தினார்.
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, சிறை சென்றதால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தார். பின்னர், இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸும் ஒன்று சேர்ந்தனர். இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு பொதுச்செயலாளர் பதவி நீக்கி, ஜெயலலிதாதான் நிரந்த பொதுச்செயலாளர் என்று அறிவித்தனர்.
மேலும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியிம் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதற்கிடையே, வெடித்த ஒற்றைத் தலைமை பிரச்சனையால், ஓபிஎஸ்ஸை, பொதுக்குழுவினர் அதிமுகவில் இருந்தே நீக்கிவிட்டனர். இதுதொடர்பாக ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக எடுத்துக் கூறியும், அதை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை.
கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தனிச்சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். டிடிவி தினகரன், ஓபிஎஸ் எல்லாம் பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், தற்போது அதிமுகவுடம் பாஜகவுடன் கைக்கோர்த்துள்ளது. ஆனால், இந்த கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுகவில் தன்னை இணைக்காவிட்டால் புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ’எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்துவிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. பண்ருட்டி ராமசந்திரனின் ஆலோசனையை ஏற்று தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை ஓபிஎஸ் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த டிசம்பர் மாதம் அளித்த விண்ணப்பத்திற்கு 2025 ஜனவரி மாதம் தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அமையும் கூட்டணியை பொருத்து ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.