மத்திய அமைச்சர் அமித் ஷா-விற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 2 நாள் தமிழ்நாடு சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கியது முதலே பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 5 முறை வந்து பிரசாரத்தில் ஈடுப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 9ம் தேதி ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்துக்காக 2 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி, ராமநாதபுரம், மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா-விற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தமிழ்நாடு சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.