டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று (மார்ச் 25) டெல்லி விரைந்தார். டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அமித்ஷாவை அவரது இல்லத்தில் இரவு 8.15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின்னர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
2023 செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், முதல்முறையாக தற்போது அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். அப்போது, “பிரிந்தது பிரிந்ததுதான்”, “இனி பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை” என்று எடப்பாடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய சந்திப்பின் மூலம் பாஜகவுக்கான கூட்டணி வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், திமுக கூட்டணியை எதிர்க்க பாஜக-வுடன் சேர்ந்து பெரிய கூட்டணியை அமைக்க இபிஎஸ் முயற்சிப்பதாகவும் கூறுகின்றனர்.
இதற்கிடையே, திமுகவை வீழ்த்த நினைக்கும் யார் வேண்டுமானாலும் பாஜகவுடன் இணையலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், அதிமுக – பாஜக கூட்டணி அமைய அதிக வாய்ப்புள்ளதாகக் கூறினர். எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பிறகு அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : இளம் வயதில் பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு இந்த உணவுகள் தான் பெஸ்ட்..!! பெற்றோர்களே மறந்துறாதீங்க..!!