திருவள்ளூர் மாவட்டத்தில் 7 அடி நிம்மாளியம்மன் மரச்சிலை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
நிம்மாளியம்மன் கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமத்தில் உள்ளது. இக்கோவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த நிலையில் தினமும் காலை மட்டும் பூஜைகள் நடைபெற்று வந்திருக்கின்றன.
நேற்று இரவு அம்மன் கோவிலின் கேட்டை நிர்வாகி கோவிந்தசாமி பூட்டிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த 7 அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை தீவைத்து எரித்துள்ளனர். கோவில் நிர்வாகி காலையில் வந்து பார்த்த போது பூட்டு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது நிம்மாளியம்மன் மரச்சிலை தீவைத்து எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
சிலை முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது. அதன்பின்பு கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.