குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தனது தயாரிப்புகளை அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துகிறது, இந்த நிலையில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பால் விலையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விலை ஏற்றம் செய்யப்பட்டது.
அமுல் என்ற பிராண்டின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF), நாடு முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளிலும் ஜூன் 3, 2024 முதல் புதிய பாலின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தியுள்ளது. இடுபொருள் செலவுகள் அதிகரித்ததே இந்த உயர்வுக்குக் காரணம் என்று கூட்டமைப்பு கூறியுள்ளது. திருத்தத்தின் மூலம், அமுல் எருமை பால் ஒரு லிட்டர் ரூ.73 ஆகவும், பசும்பால் ரூ.58 ஆகவும் இருக்கும்.
பிப்ரவரி 2023 முதல், முக்கிய சந்தைகளில் புதிய பால் பாக்கெட்டின் விலைகளை அமுல் உயர்த்தவில்லை. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு படி, அமுல் பால் உற்பத்தியாளர்களுக்கு நுகர்வோர் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிலும் கிட்டத்தட்ட 80 பைசாவை வழங்குகிறது. “விலை திருத்தம் நமது பால் உற்பத்தியாளர்களுக்கு லாபகரமான பால் விலையைத் தக்கவைத்து, அதிக பால் உற்பத்தியை இலக்காகக் கொள்ள அவர்களை ஊக்குவிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.