முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டொயோட்டா மற்றும் ஹோண்டா, அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் போனஸ் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட, மிக உயர்ந்த ஊதிய உயர்வை டொயோட்டாவின் தொழிற்சங்கம் கோரியிருந்தது. இந்நிலையில், தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அறிவித்து, தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான கோரிக்கைகளை முழுமையாக டொயோட்டா நிர்வாகம் பூர்த்தி செய்துள்ளது.
அதேபோல், ஹோண்டா நிறுவனமும் ஊழியர்களுக்கான மாத ஊதியத்தில் 11,660 ரூபாயும், அடிப்படை ஊதியத்தில் 7,670 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும், வருடாந்திர போனஸாக 6 மாத ஊதியத்தை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு முடிவு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான மனித வளங்களை, பெரு நிறுவனங்கள் சேர்த்து வைப்பதை வெளிக்காட்டுகின்றன. டொயோட்டா நிறுவனம் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிலும், ஹோண்டா நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிலும், தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருநிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், டொயோட்டா மற்றும் ஹோண்டாவின் இந்த முடிவு, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.