Court: நன்கு படித்த, நல்ல வருமானம் தரும் வேலையில் அனுபவமுள்ள ஒரு மனைவி, தனது கணவரிடமிருந்து பராமரிப்பு தொகையை கோருவதற்காக மட்டுமே சும்மா இருக்க முடியாது என்று கூறி கணவர் வழங்கும் பராமரிப்பு தொகையை 8 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைத்து ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில் விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், தன் கணவரிடமிருந்து தனக்கு பராமரிப்பு வழங்கக் கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த ரூர்கேகா குடும்ப நல நீதிமன்றம், ஜீவனாம்சத்திற்குப் பதிலாக தனது மனைவிக்கு மாதம் ரூ.8,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சதாபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது மனைவி, பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை டிப்ளமோ பெற்ற அறிவியல் பட்டதாரி என்றும் நல்ல சம்பாதிப்பதற்கான திறமையுடன் உள்ளார். சில ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார், இருப்பினும், தன்னிடம் பராமரிப்பு தொகை பெறுவதாகவும் கணவர் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி சதாபதி,”முறையான மற்றும் உயர் தகுதிகள் இருந்தும் வேலை செய்யாமல் அல்லது வேலை செய்ய முயற்சிக்காமல் கணவரிடம் பராமரிப்பு தொகை கோரும் மனைவிகளை சட்டம் ஒருபோதும் பாராட்டுவதில்லை”, “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125வது பிரிவை இயற்றுவதன் நோக்கம் என்னவென்றால், தங்களைத் தாங்களே பராமரிக்க முடியாத மற்றும் வாழ்வாதாரத்திற்கு போதுமான வருமானம் இல்லாத மனைவிகளுக்கு உதவுவதாகும் என்று குறிப்பிட்டார்.
மேலும், கணவரின் வருமானத்தில், அவரது தாயார் மற்றும் அவரது தேவைகளை கருத்தில் கொண்டும், தற்போது வேலையில்லாமல் இருக்கும் மனைவிக்கு தனது வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்க அவளுக்கு உறுதியான வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஜீவனாம்சம் தொகையை குறைத்து வழங்கினால் நீதி சரியாக இருக்கும் என்று கூறிய நீதிபதி, குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்ட பராமரிப்புத் தொகையை மாதத்திற்கு ரூ.8,000 லிருந்து ரூ.5,000 ஆகக் குறைத்து உத்தரவிட்டார்.