போபால் அருகே தனது மனைவி முன்பு அங்கிள், அங்கிள் என்று அழைத்ததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஜவுளிக் கடை உரிமையாளரை வெளுத்துக் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலின் ஜட்கேடி பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் விஷால் சாஸ்த்ரி. இவருடைய கடைக்கு ரோஹித் என்ற வாடிக்கையாளர் தனது மனைவியுடன் புடவை வாங்குவதற்காக வந்துள்ளார். ஒவ்வொரு சேலைகளாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
நீண்ட நேரமாகப் பார்த்தும் சேலைகள் எதுவும் செட் ஆகாமல் இருந்துள்ளது. அப்போது, என்ன விலைக்கு நீங்கள் புடவையை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஜவுளிக் கடை உரிமையாளர் விஷால் கேட்டுள்ளார். அப்போது, ரோஹித் தான் ஆயிரம் ரூபாய்க்குள் புடவை எதிர்பார்ப்பதாகவும், அதற்கு மேல் இருந்தாலும் காட்டுங்கள் என்றும் கூறியுள்ளார். அப்போது அவர்களிடம் பேசிய விஷால், அங்கிள் அதிக ரேட்டிலும் புடைவையை காட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
அங்கிள் என்று கூறியதால் கடுப்படைந்த ரோஹித் அங்கிள் என்று கூப்பிடாதீர்கள் என்று விஷாலை எச்சிரித்துள்ளார். ரோஹித்துக்கும், விஷாலுக்கும் இடையே இதுதொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, ரோஹித் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடையைவிட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து சில நபர்களுடன் ஜவுளிக் கடைக்கு வந்து விஷாலை கடையில் இருந்து சாலைக்கு இழுத்து வந்து பெல்ட்டால் அவரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஷால், ரோஹித் உள்ளிட்டோர் மீது புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, விஷால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில், ரோஹித் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more ; இப்படி முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாது.. அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? இப்ப தெரிஞ்சுக்கோங்க!