விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டல புலியூர் பகுதியில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கே மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற 150 க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்கள். அந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தனது மாமாவை காணவில்லை என்று சலீம்கான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்..
இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.. இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..
இந்த வழக்கில் அன்பு ஜோதி இல்ல உரிமையாளர் ஜூபின் பேபி, மனைவி மரியா மற்றும் 6 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. ஆசிரமத்தில் தங்கி இருந்த 140-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 16 பேர் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.. இதனிடையே ஆசிரமத்தின் மர்மம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.. தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்..
இந்நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி இந்த சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விரைவில் விசாரிக்க தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..